ஒருமுறை மகாவிஷ்ணுவை சந்தித்தார் பூமாதேவி. அப்போது ஐயனே, உங்களுக்கு, லட்சுமி, நான் ஆகிய இரு தேவியர்கள்.
அப்படியிருந்தும் லட்சுமியை மட்டும் தாங்கள் மார்பில் இடம் கொடுத்து வைத்துள்ளீர்கள். அதேபோல் எமக்கொரு இடம் தந்தால், தங்களின் திருமார்பில் லட்சுமிக்குரிய பெருமை எமக்கும் கிடைக்கும் என்று வேண்டுகோள் வைத்தார். இதைக்கேட்ட மகா விஷ்ணு, உமக்கும் எமது மார்பில் இட மளிக்கிறேன். அதற்கு கொஞ்சம் காலம் பொறுத்திருக்கவேண்டும் தேவி என்று கேட்டுக்கொண்டார்.
பூமாதேவியின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவுசெய்த திருமால், அதில் ஒரு திருவிளையாடலை நிகழ்த்த விரும்பினார். மிருகண்டு முனிவரின் மகன் மார்க்கண்டேயர், இவர் கங்கையிலும் சிறந்தது என்று போற்றப் படும் குடந்தை அருகே (கும்பகோணம்) காவிரி ஆற்றின் தென்புறத்தில் துளசி வனமாக இருந்த, அந்தப் பகுதியில் தனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டி பெருமாளை நினைத்து, கடும் தவம் செய்து கொண்டிருந்தார். மார்க்கண்டேயரின் தவத்தை நிறைவேற்றவும், அதேபோல் பூமாதேவியின் விருப்பத்தை நிறைவேற்றவும் முடிவு செய்தார் மகாவிஷ்ணு. அதன்படி, தன் துணைவியான பூமாதேவியை மார்க்கண்டேய முனிவர் தவம்செய்த பகுதியிலுள்ள, ஒரு துளசிச் செடியின் கீழே இரண்டு வயது குழந்தையாக தவழச் செய்தார்.
தவத்திலிருந்த மார்க்கண்டேயரின் அருகில் மழலையின் குரல் கேட்டது. திடுக்கிட்டு கண்விழித்தார். அப்போது சந்திர, சூரியனை மிஞ்சும் அழகான பெண் குழந்தை ஒன்று துளசிச்செடியின் அடியில் கிடப்பதைக் கண்டார். ஆட்கள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில், திடீரென குழந்தை எப்படி வந்தது. நம் தவத்தை ஏற்றுக்கொண்ட மாயவன் கிருஷ்ணன் செய்த மாயையோ என்று கருதிய முனிவர் அப்படியே அந்தக் குழந்தையை வாரி எடுத்து உச்சி முகர்ந்தார். இறைவன் தம் வேண்டுதலை நிறைவேற்றி விட்டார் என்று நன்றி கூறினார்.
பெண் குழந்தையை மடியிலிருந்து கீழே இறக்கிவிட்டு குழந்தாய் நீ யார்? உன் பெற்றோர் யார்? எப்படி இந்த இடத்திற்கு வந்தாய்? என்று கேள்விகளை எழுப்பினார்.
மார்க்கண்டேயரிடம் அந்தக் குழந்தை, எனக்கு பெற்றோர், உற்றார் யாருமில்லை. நான் எப்படி இங்கு வந்தேன் என்பதே எனக்குத் தெரியாது. தாங்களே எனக்கு அடைக்கலம் தரவேண்டும் என்ற அந்தக் குழந்தை மார்க்கண்டேயரின் மடியில் ஏறி அமர்ந்துகொண்டது. பூமியில் கண்டெடுத்ததால் அக்குழந்தைக்கு பூமாதேவி என்றும், துளசிச் செடியின் அருகில் கண்டெடுத்ததால் துளசி என்றும், பெயரிட்டு வளர்த்துவந்தார். அந்தக் குழந்தை மார்க்கண்டேயரின் அன்பான அரவணைப்பில் வளர்ந்து குமரியாகி நின்றது.
இப்படி அனைத்து அம்சங்களும் நிறைந்த தன் மகளுக்கு திருமணம் செய்ய எண்ணினார் முனிவர். மகளுக்கு ஏற்ற வரனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பகவான் ஸ்ரீமன் நாராயணனை வேண்டினார். என் மகளுக்கு ஏற்ற வரனை தாங்களே அனுப்பி வைக்கவேண்டும் என்று. ஒருநாள் வயதான முதியவர் ஒருவர் கிழிந்த கந்தலாடை, நோயாளி போன்ற தோற்றம், பார்ப்பதற்கே பரிதாபகரமான நிலையில் முனிவரின் குடிலை நாடிவந்தார். அவரை வரவேற்று உபசரித்த முனிவர், ஐயனே! தாங்கள் இங்குவந்த நோக்கம் என்ன என்று கேட்டார். அப்போது, அந்த முதியவர் "மகரிஷியே அடியேன் சொல்வதை கோபப்படாமல் கேட்டு அதை நிறைவேற்ற வேண்டும்' என்று பீடிகையுடன் பேச ஆரம் பித்தார். அப்படியென்ன கேட்க போகிறீர்கள், கேளுங்கள் என்றார் முனிவர்.
அந்த முதியவர் இல்லற பாக்கியமில்லாத மனிதனுக்கு வாழ்க்கையில் நிறைவு கிடையாது என்று வேதங்கள் கூறுகின்றன. மனைவி இல்லாதவனுக்கு இல்லறமில்லை வீடு, பேறு, செல்வம், பசுக்கள் முதலிய செல்வங்கள் இருந்தாலும், அது இல்லாத நிலை தான், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றிற்கு காரணமானவள் மனைவி. தங்களுக்கு தெரியாத தர்ம வாழ்க்கைமுறை இல்லை. ஆதலால் தங்கள் மகளை எனக்கு மணம் செய்துகொடுத்து, எமது இல்லறத்தை நல்லறமாக்க உதவி செய்யவேண்டும் என்றார்.
நானும் நல்ல குலத்தில் பிறந்தவன்தான். என் சரீரத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் முதிர்ச்சியற்ற தோற்ற நிலையில் உள்ளேன். எமக்கு வயது ஒன்றும் ஆகவில்லை. எனவே, எமது வேண்டுகோளை மறுக்காமல் தங்கள் புத்திரியை, எமக்கு மணம் செய்து கொடுங் கள் என்று கேட்டார். அந்த முதியவரின் பேச்சைக்கேட்ட மார்க்கண்டேயர் கதி கலங்கிப் போனார். மகாலட்சுமியை ஒத்த தமது மகளை ஒரு வயதான முதியவருக்கு அதுவும் நோயாளியாக உள்ள ஒருவருக்கு திருமணம் செய்துகொடுப்பதா? சித்தம் கலங்கிப்போனது மார்க்கண்டேய முனிவருக்கு. அந்த முதியவரிடம் நீங்களோ வயது முதிர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். எனது மகளோ இளமங்கை, இவள் எப்படி தங்களுக்கு பொருத்தமான மனைவியாக முடியும். எனவே, எமது மகளை தாங்கள் மணம் செய்துகொண்டால், நீங்களும் நானும் பாவத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, தங்களுடைய நலனை கருத்தில்கொண்டு கூறுகிறேன். இந்த முதிய பருவத்தில் மணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என்று கூறினார் முனிவர்.
அந்த முதியவர் முனிவரின் கால்களைப் பற்றிக்கொண்டு முனிவரே, தாங்கள் கூறும் அறிவுரைகள் எதுவும் என் செவியில் ஏறவில்லை. தங்கள் புதல்வியைக் கண்டதுமுதல் அவரை மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆவல், அதிகரித்து நிற்கிறது.
எனவே, அவளை எனக்கு மணம் செய்து கொடுத்தால் சந்தோஷமாக இருப்பேன். இல்லையேல் தங்களுக்கு எதிரிலேயே என் உயிரைவிட்டு விடுவேன். அந்தப் பாவமும் உங்களையே சேரும் என்றார். முதியவரின் பிடிவாதம் முனிவருக்கு பெரும் தர்ம சங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இருந்தும் மார்க்கண்டேயர் முதியவரைப் பார்த்து சாமி, தங்களுக்கு இந்த உலகத்தில் உற்றார்- உறவினர்கள் யாருமில்லை என்கிறீர்கள். என் மகளை நீங்கள் மணந்தால் தங்களுக்கு அவள்தான் உணவு சமைத்துத் தரவேண்டும். எம் மகளுக்கு சரியான அளவில் உப்பு போட்டுகூட சமைக்க தெரியாது. அப்படி செல்லமாக மகளை வளர்த்துவிட்டேன். என் மகளை நீங்கள் மணந்துகொண்டால் சமைக்கத் தெரியாத மகள்மீது தங்களுக்கு கோபம் வரும். அதனால் அவளை துன்புறுத்த நேரிடும். இவற்றைக் கருத்தில் கொண்டாவது தங்கள் மணம்புரியும் எண்ணத்தை கைவிடுங்கள் என்று கூறுகிறேன். ஆனால் தாங்களோ, என் மகளை மணமுடித்து தராவிட்டால் உயிரைவிட்டு விடுவதாக கூறுகிறீர்கள். இப்பொழுது, நான் என்ன செய்வேன். இதற்கு நான் வணங்கும், மகாவிஷ்ணுவான நாராயணரே, தீர்வுகூறவேண்டும் என்ற மார்க்கண்டேயர் மகாவிஷ்ணுவை நோக்கி கண்களைமூடி தியானித்தபடி நாராயணரின் பெருமைகளை மனமுருக வேண்டினார்.
பெருமாளே எமக்கு ஏற்பட்டுள்ள, இந்த இக்கட்டான நிலையை நீதான் சரி செய்ய வேண்டும் என்று துதித்தார்.
பெருமாளைத் துதித்த முனிவர். தமது மகளை அழைத்தார். இந்த முதியவர் உம்மைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். "உமக்கு அதில் விருப்பம் உண்டா?' என்று கேட்டார். பருவ மங்கையான நான், இந்த கிழவருக்கு மாலையிடமாட்டேன். அப்படி நீங்கள், என்னை இவருக்கு திருமணம் செய்துகொள்ளக் கூறி கட்டாயப்படுத்தினால் நானும் என் உயிரை விட்டுவிடுவேன் என்று உறுதியாகக் கூறினார்.
மகளின் பதிலை கேட்ட மார்க்கண்டேயே முனிவரின் மனம் கலங்கியது. அழிவற்ற திருமேனியுடையவனே! திருமகள் நாயகனே!
அடியாருக்கு வரும் இன்னலைப் போக்கி அருள்புரிபவனே! கருணை வடிவம் கொண்டவனே! பாவ புண்ணியம் இவற்றிற்கு ஏற்ற பலனளிப்பவனே! புத்திர பாசத்தால் கட்டுண்டு தவிக்கும் எனக்கு ஒருவழி காட்டவேண்டும். உனையன்றி வேறு, ஒரு புகலிடம் உண்டா? என்று முனிவர் மீண்டும் கண்மூடி திருமாலை வேண்டினார். நெடுநேரம் கண்களை மூடி தியானித்த முனிவர் பிறகு கண்களைத் திறந்து பார்த்தார். என்ன ஆச்சரியம். எதிரே நின்ற முதியவரை காணவில்லை. மகாவிஷ்ணு எதிரே காட்சியளித்துக் கொண்டிருந்தார். இளமை வடிவம், பொன்னாடை, இரு திருக்கரங்களில் திருவாழி, திருச்சங்கு, தலையில் ஒளிவீசும் கிரீடம், உடலில் எல்லையற்ற அணிமணிகள் அணிந்தபடி பெருமாள் மார்க்கண்டேயருக்கு காட்சி தந்தார்.
இறைவனைக்கண்ட மார்க்கண்டேயர், அவரது பாதங்களில் விழுந்து தொழுதார். ஆனந்தத்தில் ஆடினார்- பாடினார், வியப்பும் களிப்பும் அடைந்தார். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. முனிவரின் பக்தியை கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, முனிவரே உம்முடைய பக்தியை கண்டு மகிழ்ந்தோம். யாமே உமக்கு மருமனாக போகிறேன். இப்பொழுது உமது புதல்வியாக வளர்த்துள்ள பூமாதேவியை, எமக்கு திருமணம் செய்துகொடுக்க சம்மதம்தானே என்று கேட்க, ஐயனே! அகில உலகமும் உமது திருவடிக்கு கீழ் உள்ளது. அப்படியிருக்க எமது மகளை உமக்கு மணம் செய்து கொடுக்க இனி ஏது தடை என்று முனிவர் கூற, அப்போது பெருமாள் முனிவரே! பூமாதேவி எமது மார்பில் மகாலட்சுமியைப் போல இடம்பெறவேண்டும் என்று ஆசைப்பட்டார்.
அதேபோல் நீங்களும் பூமாதேவி தங்களுக்கு மகளாக வந்து வாய்க்கவேண்டும் என்று தவமிருந்தீர்கள். உங்கள் இருவரது விருப்பங்களை நிறைவேற்றவே பூமாதேவியை துளசிச் செடி, அருகே குழந்தையாக அவதரிக்க செய்தேன். தற்போது அவரை மணக்கும் நேரம் வந்துவிட்டது. அதில் ஒரு விளையாட்டை நிகழ்த்திகாட்ட விரும்பினேன். அதுதான் முதியவர் வேடம் தரித்து வந்தேன், வேறொன்றுமில்லை. மேலும், நீங்கள் உங்கள் மகளுக்கு உணவுப் பண்டங்களில் சரியான அளவில் உப்பு சேர்த்து சமைக்கத் தெரியாது என்று கூறிவிட்டீர்கள்.
எனவே, இனிமேல் இவ்வாலயத்தில், எமக்கு உப்பு இட்ட உணவு படைக்கவேண்டாம். உப்பில்லாத உணவே, எமக்கு சுவையாக இருக்கும். உப்பின்றி படையலிடும் உணவை யாம் புசித்தபிறகு எஞ்சியதை பக்தியோடு உண்பவர்களுக்கு அந்த உணவு மிகவும் சுவையுடையதாக இருக்கும். அதோடு உப்புடன் யாரும் கோவிலுக்குள் வரக்கூடாது. அப்படி வருபவன் நரகத்தில் உழல்வான். ஆலயத்தில் வழங்கப்படும் உப்பில்லாத உணவை சாப்பிடும் நபர்கள், ஆயிரம் விரதங்களின் பலனை பெறு வார்கள் உணவுகளை உப்பில் லாமல் சமைத்து, இறைவனுக்கு படைத்து பிறருக்கு அளிப்பவர்கள் எல்லா பாவங்களும் நீங்கபெற்று வைகுண் டத்தை அடைவார்கள். மேலும் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமையிலும் மற்றும் திருவோண நட்சத்திரத்தன்றும் இக்குளத்தில் நீராடி எம்பெருமாளை தரிசிப்பவர்கள் வைகுந்தம் சென்று சேருவார்கள். இவ்வால யத்திற்கு வரும் பக்தர்கள் உப்பையும் உப்புகலந்த பிற உணவுப் பொருட்களையும் எடுத்து வரக்கூடாது. எடுத்துவந்தால் பெருமாளுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். கொடிய நரத்தில் தள்ளப்படுவார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை யாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தில் துலாபாரம் வைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியபிறகு, துலாபாரத்தில் உப்பைத் தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள். திருப்பதி சென்று வெங்கடாசலபதி பெருமாளை தரிசிக்க முடியாதவர்கள் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் உப்பிலியப்ப வெங்கடாசலபதியை வந்து தரிசிக்கிறார்கள்.
அங்கு சென்று செலுத்தமுடியாத காணிக்கைகளையும், இவ்வாலய பெருமாளுக்கு செலுத்துகிறார்கள். பெருமாளின் சிறப்பு பெற்ற ஆலயங்கள் 108. இறைவனை உப்பிலியப்பன் என்றும் ஒப்பிலியப்பன் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். பூமாதேவிக்கு சரியான அளவில் உப்பு போட்டு சமைக்கத் தெரியாது என்று மார்க்கண்டேய மகரிஷி கூறிய ஒரு வார்த்தையினையால் பெருமாள் உப்பில்லாத உணவை ஏற்றுக்கொண்டார். அதனால் இவருக்கு உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை உடையவர். இவருக்கு ஈடு இணையில்லை. இவரை யாரோடும் ஒப்பிடமுடியாது என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். 108 திவ்ய தேசங்களில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம்- உப்பிலியப்பன் கோவில் பூமாதேவி சமேத ஒப்பிலியப்பன் பெருமாள் கோவில் 13-ஆவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. தென் திருப்பதி என்று இத்தலம் சிறப்பு பெற்றுள்ளதால், இப்பெருமாளுக்கும் தனி சுப்ர பாதம் உண்டு.
உப்பிலியப்பன் பிறந்த நட்சத்திரம் திருவோணம். மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திரத்தன்று, இப்பெருமாள் சன்னதியில் பகல் 11.00 மணி அளவில் மூலவருக்கு சாம்பிராணி தூபம் கட்டப்பட்டு அகண்ட தீபமேற்றப்படுகிறது. அப்போது பெருமாள் எழுந்தருளுவதாக ஐதீகம். திருவோண நட்சத்திரத்தன்று குளித்து முடித்து விரதமிருந்து உப்பில்லாத உணவை இறைவனுக்கு படைத்து பின்னர் அதனை உண்டு விரதம் முடிப்பது மிகச்சிறப்பு. இக்கோவிலுக்கு வரமுடியாத பக்தர்கள்கூட தங்கள் வீடுகளில் திருவோண விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். பெருமாள் அருளால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்கிறார்கள் பெருமாளின் பக்தர்கள்.
பெரிய வெங்கடாசலபதி, திரு விண்ணகரப்பன், தன்னொப்பாரில்லா அப்பன், சீனிவாசன் என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் உப்பிலியப்பன். கிழக்கு நோக்கி திருப்பதி வெங்கடாசலபதி போன்று நின்ற கோலத்தில் காட்சிதருகிறார் பூமாதேவி நாச்சியார். வடக்கு நோக்கி அமர்ந்துள்ளார் மார்கண்டேயே மகரிஷி. தெற்கு நோக்கி மகளை பெருமாளுக்கு கன்னிகா தானம் செய்துகொடுக்கும் கோலத்தில் காட்சி தருகி றார். பூமாதேவி அவதரித்த தலம் என்பதால் இங்கு அவருக்கு தனிச்சன்னதி இல்லை. அவர் இறைவனின் இதயத்தில் இடம் பெற்றுள்ளார்.
ஆலயத்தில் கருடன், இராமானுஜர், ஆழ்வார்கள், ஆஞ்சனேயர், இராமர் ஆகியோர்களுக்கு தனித்தனிச் சன்னதிகள் உள்ளன.
இவ்வாலய இறைவன் கருடன், காவேரித்தாய், தர்மதேவதை, மார்க்கண்டேயர் ஆகியோருக்கு நேரடி காட்சி கொடுத்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளன. குழந்தை பாக்கியம் வேண்டு வோர் விரதமிருந்து. இவ்வாலய திருக் குளத்தில் நீராடி காலை 9.00 மணிக்கு நடைபெறும் சந்தானகிருஷ்ணனை மடியில் எழச்செய்யும் சேவையின்போது கலந்துகொண்டு பெருமாளை வணங்கினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு. மேலும் குழந்தைப் பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகமும் நடைபெறுகிறது. ஸ்ரீராம நவமியின் போது 11 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது.
இவ்வாலயத்திலுள்ள மூலவருக்கு திருமஞ்சனம் செய்தால், நினைத்தகாரியம் நிறைவேறும். தம்பதிகள் மன ஒற்றுமை, சனி கிரக தோஷ நிவர்த்தி உட்பட சகலதோஷங்களும் நீங்கும். உற்சவர். திருக் கல்யாண காட்சியை திருமணத்தடை உள்ளவர்கள் தரிசித்தால் தடை நீங்கி திருமணம் நடைபெறும்.
ஆலய அமைவிடம்
கும்பகோணம் அருகே ஏழு கிலோமீட்டர் தூரத்திலுள்ளது திருநாகேஸ்வரம். இங்குதான் உப்பிலியப்பன் கோவிலும்,ராகுபகவான் ஆலயமும் அமைந்துள்ளன.